முறையாக மின்சாரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் - விவசாயிகள் சாலை மறியல்
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே முறையாக மின்சாரம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப்படாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் 1972ஆம் ஆண்டு போடப்பட்டவை என்பதால் அவை அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. இதனால் முழுமையாக மின்சாரம் கிடைக்கவில்லை.
முத்துவாஞ்சேரி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் விவசாயம் செய்துவருகின்றனர். இவற்றிற்கு 100க்கும் மேற்பட்ட மின் மோட்டார்களிருந்து மின்சாரம் பெறப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தொடர் மின்வெட்டு பிரச்னை காரணமாக மின் மோட்டார்கள் அதிக அளவில் பழுதாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் அலுவலர்கள் அலட்சியம் காட்டி மின்மாற்றியை மாற்ற முன்வரவில்லை எனவும் கூறுகின்றனர்
பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தா.பழூர் - முத்துவாஞ்சேரி வழியாக அரியலூர் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.