அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் - அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர்: காரைக்காட்டன்குறிச்சி கிராமத்திற்கு குடிநீர், சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பருக்கல் ஊராட்சி காரைக்காட்டான்குறிச்சி கிராமத்திற்கு குடிநீர், சாலைவசதி, சுடுகாட்டு கொட்டகை, தெருவிற்கு வடிகால் வசதி, பேருந்து போக்குவரத்து வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளைக் கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டியால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காரைக்காட்டான்குறிச்சி விவசாயிகளை உறுப்பினர்களாகச் சேர்த்து விவசாய கடன், இதர கடன்களை வழங்க வேண்டும். தற்பொழுது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கும் கடன் வழங்க வேண்டும்.
காரைக்காட்டான் குறிச்சி கிராமத்தில் 2 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் கடந்த 3 மாதகாலமாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமையை வேடிக்கை பார்க்கும் ஒன்றிய ஆணையர்களையும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்தும், நாடு சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆகியும் இறந்த உடலை அடக்கம் செய்ய மயான கொட்டகையும், மயான சாலை வசதியும் இல்லாமல் இருக்கும் அவல நிலையை போக்கி உடனடியாக மயான சாலை செப்பனிடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இங்கு மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. ஆகவே வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் இக்கிராமத்தில் வடக்கு வாசனேரி மக்கள் மயானத்திற்குச் செல்லும் பாதையை சீரமைப்பு செய்து கொடுக்க வேண்டும். பெரிய ஏரியை தூர்வாரி கரையை செம்மைப்படுத்தி நீர் தேங்கி நிற்கும் வகையில் கரையைச் சுற்றித் தடுப்பு சுவர் கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.