அரியலூர்:ரேஷன் கடைகளில் மீதமுள்ள கரும்புகளை அந்தந்த மாவட்ட அளவிலான குடோன்களில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ரேஷன் கடை ஊழியர்கள் உச்சகட்ட கிலியில் உள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது ஜன.,9ம் தேதி துவங்கி நடைபெற்றது. பரிசுத் தொகுப்பை பொங்கலுக்குள் பெற்றுக் கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்கள் அதன் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிசு தொகுப்பில் வழங்குவதற்காக ஆறடி உயரம் கொண்ட முழுக் கரும்புகளை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அறிவுரை வழங்கி இருந்தது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்டத்தில் செங்கரும்பு பயிரிட்டு இருந்த விவசாயிகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நேரடியாக சந்தித்து, கரும்பை ஆய்வு செய்து, கொள்முதல் செய்து கொண்டு வந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழுக்கரும்பை வழங்கினர்.
6 லட்சம் பேர் பொங்கல் தொகுப்பு வாங்கவில்லை: பொங்கல் கரும்பு கொள்முதலுக்கு மட்டும் அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாயை நிதியாக ஒதுக்கீடு செய்தது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களும் முழுக் கரும்பை இலவசமாகப் பெற்று சென்றனர்.
ஆனால், தமிழ்நாடு முழுவதும் 6 லட்சம் பேர் இதுவரை பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளவில்லை. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும்கூட பரிசுத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தபோதும் பலர் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்ற சூழ்நிலைகள் காரணமாக 6 லட்சம் பேர் வரை பொங்கல் தொகுப்பை இதுவரை பெறாமல் உள்ளனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 20% பேர் இன்னும் பொங்கல் பரிசு பெறவில்லை.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவால் ரேஷன் கடை ஊழியர்கள் கதிகலங்கி நிற்கின்றனர். கூட்டுறவுத்துறை சார்பில் அந்தந்த மண்டலப்பதிவாளர்கள், இணை பதிவாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்று திடீரென்று அனுப்பப்பட்டது.
தலைசுற்ற வைத்த சுற்றறிக்கை: அந்த சுற்றறிக்கையில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி அந்தந்த மாவட்டத்தில் எத்தனை சதவீதம் நிறைவு பெற்றுள்ளது? பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளாத ரேஷன் அட்டைதாரர்கள் விவரம் என்ன? எத்தனை சதவீதம் பேர் வாங்கி உள்ளனர்? எத்தனை சதவீதம் பேர் வாங்கவில்லை? வாங்காததற்கு காரணம் என்ன? இந்த விவரங்களை துறை தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
அதேபோல பொங்கல் பரிசு தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்பட்ட கரும்பு மீதம் எவ்வளவு அந்தந்த அங்காடிகளில் உள்ளது? அந்த கரும்புகளை உடனடியாக அந்தந்த மாவட்ட அளவில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.