அரியலூர்: இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட அளவில் 5 முதல் 8, 9 முதல் 12 மற்றும் 13 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) குரலிசை மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பரதநாட்டியம் (செவ்வியல் கலை)- பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள், நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.
கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) - தமிழ்நாட்டின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்.