தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு தளர்வு படிப்படியாக அமல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் அந்தந்த மாவட்டத்திற்குள் மட்டும் பொது போக்குவரத்து இயங்கும் என அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
அரியலூர்: பேருந்துகளுக்கான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் பணிமனையிலிருந்து 175 பேருந்துகள் இன்றுமுதல் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்டுவருகின்றன. மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பணியாளர்கள் என அனைவரும் கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: அரசின் அறிவிப்பையடுத்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், துறைமுகம், விளாத்திகுளம், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளுக்கும் இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் பேருந்துகளில் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே பயணித்தனர்.