அரியலூர்:சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாச ஐயர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி மகன் மோகன். சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “சென்னை தியாகராயநகர் கிளை வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் கடந்த 31.12.2012அன்று ஒனிடா எல்சிடி டிவி வாங்கினேன். அப்போதைய விலை ரூபாய் 21 ஆயிரத்து 300. இந்த டிவிக்கு வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் உண்டு. 2016ஆம் ஆண்டு வரை பராமரிப்பு ஒப்பந்த தொகை செலுத்தி உள்ளேன்.
ஆனால், 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டிவியின் மானிட்டர் வேலை செய்யவில்லை. இதுகுறித்து ஒனிடா நிறுவனத்தை கேட்ட போது வாரன்டி காலம் இருப்பதால் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச்செல்லுமாறு கூறினார்கள். அங்கு என்னிடம் சர்வீஸ் தொகையாக 9 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுக்கொண்டனர்.
வாரன்டி காலம் உள்ள நிலையில் சர்வீஸ் தொகையை பெற்றது தவறு. இதில் சேவை குறைபாடு உள்ளது. எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இந்த வழக்கானது சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் ராமராஜ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ’வாரன்டி காலம் உள்ள நிலையில் சர்வீஸ் தொகையைப் பெற்றதால் சேவை குறைபாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனம், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் சேவை குறைபாடு ஏற்படுத்தி மனுதாரருக்கு மன உளைச்சல் உண்டாக்கியதற்காக பத்தாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸை திறக்க எப்படி அனுமதித்தீர்கள்? - ஐகோர்ட் கிளை