அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தாமரை ராஜேந்திரனுக்கு (அரசு கொறடா), தனியார் தொலைக்காட்சி ஒன்று நேற்று (அக். 23) மக்கள் சேவகர் என்ற விருதை பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கியது.
இதைப் பெற்றுக்கொண்டு அரியலூர் நகருக்கு திரும்பிய அரசு கொறடா தாமரை ராஜேந்திரனுக்கு அதிமுக நகர கழகம் சார்பில் வெடிகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது சாலையோரம் நின்றிருந்த திமுக தொண்டர் டென்சி என்பவர் கொறாடா குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால், இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருதரப்பினரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு (அக். 23) அதிமுக நகரச்செயலாளர் செந்தில், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சிவா உள்ளிட்ட பலரும் திமுக தொண்டர் டென்சியின் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நிகழ்விடத்திற்கு நள்ளிரவில் சென்ற திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர், டென்சியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் திமுக தொண்டர் தாக்கப்பட்டதற்கு புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறி 200-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், பொறுப்பாளர்களுடன் அரியலூர் காவல் நிலையத்தை திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் முற்றுகையிட்டார்.
சுமார் ஒருமணி நேரத்திற்குப் பிறகு திமுக தொண்டர் டென்சி தாக்கப்பட்டது குறித்து அதிமுக நகரச்செயலாளர் செந்தில், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சிவா உள்ளிட்ட நபர்கள் மீது அரியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அதன் நகலை திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கரிடம் வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர், "திமுக தொண்டரைத் தாக்கிய அதிமுக நகரச்செயலாளர் செந்தில், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சிவா உள்ளிட்டவர்களை கைதுசெய்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
இவர்களை கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.