தாமரைக்குளம் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்! - அரியலூர் செய்திகள்
அரியலூர்: தாமரைக்குளத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் தாமரைக்குளம், ஓட்ட கோயில், வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்கள் அவசர மருத்துவ சேவைக்காக அரியலூர் அரசு மருத்துவமனை அல்லது பொய்யாத நல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
இவர்கள் தங்கள் கிராமத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தால் நன்றாக இருக்கும் என தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தாமரைக்குளத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் நேற்று (ஜூலை 4) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
மேலும் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் வரும் நோயாளிகளிடம் கனிவாகப் பேசி அவர்களின் நோய்களை குணப்படுத்த வேண்டும் எனவும் ராஜேந்திரன் கூறியுள்ளார்.