அரியலூர்:இந்தியாவில் 4 கோடியே 99 லட்சம் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் வாயிலாக பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இலவச மற்றும் நியாய விலைப்பொருள்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரேஷன் கடையின் செயல்பாடுகளை பரவலாக்கும் நோக்கத்திலும் ’ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரேஷன் திட்டம்’ என்ற திட்டத்தை பரவலாக்கும் வகையிலும் மத்திய அரசு தனியார் ரேஷன் கடைகளை திறக்க முன்வந்துள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 75 என்ற அடிப்படையில் தனியார் ரேஷன் கடைகள் திறக்கப்பட உள்ளன.
இது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ''ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை பரவலாக்கம் செய்யும் வகையில் ரேஷன் விநியோகத் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டெல்லி ஐஐடி மற்றும் world food program ஆகியோர் இணைந்து விரிவான ஆய்வுகளை நாடு எங்கிலும் மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில் ரேஷன் கடை திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் fair price shop என்ற பெயரில் டீலர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 fair price shop கடைகளை திறக்க வேண்டும்.