அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வசித்து வரும் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர், பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டுச் சென்றுள்ளார்.
வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் கிளை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.
அப்போது பேசிய வங்கி மேலாளர், "உனக்கு இந்தி தெரியுமா?"(Do u know Hindi) என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். அதற்கு மருத்துவர் "எனக்கு இந்தி தெரியாது. ஆனால் தமிழும் ஆங்கிலமும் தெரியும்" (I don't know Hindi, but I know Tamil and English) என ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார்.
அதன் பின் வங்கி மேலாளர், "நான் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவன், எனக்கு இந்தி தான் தெரியும்." (I am from Maharashtra, I know Hindi only) எனத் தெரிவித்துள்ளார்.