அரியலூர்: விரகாலூர் கிராமத்தில் யாழ் கிராக்கர்ஸ் என்ற பெயரில் நாட்டுவெடி தயாரிப்பு மற்றும் சிவகாசி வெடிகள் விற்பனை செய்யும் கடையை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணியில் உள்ளூர் நபர்கள் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் காலை 9:30 மணியளவில் பட்டாசு தயாரிக்கும் பொழுது, திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பட்டாசுகளில் தீ பரவியதால் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. வான் உயரத்திற்கு பட்டாசுகளின் புகையும், தீப்பிழம்பும் வெளியேறியதை கண்ட அருகில் உள்ள கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்துள்ளனர்.
பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டவுடன் காயங்களுடன் தப்பித்து ஓட முயற்சித்து உள்ளனர். இதனை அடுத்து அரியலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து மூன்று மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலரும் படுகாயங்களுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணி மேரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டதோடு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வெடிக்காத குண்டுகள் சிதறி கிடப்பதால் அப்பகுதிக்குள் பொதுமக்கள் வராத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், வெடி விபத்து ஏற்பட்டவுடன் பலரும் ஓடி உள்ளதால் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கீழப்பலூர் போலீசார் வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்தில் இருந்த ஒரு வேன் ஒன்பது மோட்டர் பைக் மற்றும் ஒரு டிராக்டர் தீ விபத்தில் எரிந்து கருகி சேதம் அடைந்து உள்ளது. இரண்டு வெடி மருந்து தயாரிக்கும் கிடங்குகள் தரைமட்டமாகி உள்ளது.
இதையும் படிங்க:"உங்களுக்கு வந்தால் தக்காளி.. எங்களுக்கு வந்தால் ரத்தமா?" - அமைச்சர் கே.என்.நேரு!