அரியலூர் மாவட்டம், தெற்கு தெரு என்ற கிராமத்தைச்சேர்ந்தவர், ராமலிங்கம். அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது, ''கும்பகோணத்தில் இயங்கி வரும் ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் வீடு கட்ட எனது மனைவி தமிழரசி பெயரில் வீட்டுக்கடன் பெற்றோம்.
கடன் கொடுத்த மேற்படி நிறுவனத்தார், தாங்கள் நவி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவன (பழைய பெயர் DHFL) முகவராக இருக்கிறோம். எங்களிடம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் முழு குடும்பத்திற்கும் விபத்து காப்பீடு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் பாலிசி எடுத்தோம். பாலிசியானது 28.02.2019 முதல் 27.02.2024 வரை செல்லுபடியாகும். இந்நிலையில் வேலைக்காக கேரளா சென்றேன். அங்கு ஏற்பட்ட விபத்தில் இடது கை நசுங்கியது. எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, இடது கையை துண்டிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து என்றனர்.
இடது கை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து காப்பீடு நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்தோம். ஆனால், இழப்பீடு வழங்கவில்லை. காப்பீடு இழப்பீடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில் ஆஜரான இன்சூரன்ஸ் நிறுவன வழக்கறிஞர், இன்சூரன்ஸ் நிறுவன விதிகளின்படி இடதுகை துண்டிக்கப்பட்டால் இழப்பீடு கிடையாது என்று வாதிட்டார்.