அரியலூர்: மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு முதல், கோவிட்-19 பெருந்தொற்று குறித்து கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என கூறினார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கோவிட்-19 பெருந்தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பதுடன், கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கான (இரண்டு தவணைகளும்) சான்று பெற்றிருக்க வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளை உரிமையாளர், உதவியாளர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக் கவசம் அணிவதும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் விழாக் குழுவினர் கீழ்க்கண்ட விவரங்களுடன் முழுமையாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.