அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) என்பது, இந்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நலத்திட்டம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள முதியோர், விதவை மற்றும் ஊனமுற்றோர் போன்ற ஏழைக் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.
'சம்பல்' (SAMBAL) மொபைல் செயலி, தேசிய தகவலியல் மையத்தால் (NIC) உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள், ஓய்வூதியம் பெற பதிவு செய்வது, நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.
ஓய்வூதியம் பெறுபவர்களின் பட்டியல், நேரடிப் பயன் பரிமாற்றம் (Direct Benefit Transfer) குறித்த விவரம், மற்றும் தங்களுக்கு அருகில் உள்ள வங்கி மற்றும் தபால் நிலையங்கள் குறித்த விவரங்களை அறிய உதவியாக உள்ளது. எனவே, தேவையானவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில், சம்பல் மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.