தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TAHDCO: சொந்த நிலம் வாங்க ஆசையா? - தாட்கோ மூலம் நிலம் வாங்க விண்ணப்பம் வரவேற்பு - Ramana Saraswati IAS

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரசு மானியத்துடன் நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ரமண சரஸ்வதி
ரமண சரஸ்வதி

By

Published : Jan 12, 2023, 5:58 PM IST

அரியலூர்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் எனப்படும் தாட்கோ மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்மைப்படுத்தி, மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தமிழ்நாடு அரசின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2022-23ஆம் நிதி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி, ஆதிதிராவிட பழங்குடியின மக்களின், சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்த மானியத்துடன் சொந்தமாக நிலம் வாங்கும் திட்டத்தை அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்கள், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் வருமானம் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என்றும் மேற்கண்ட தகுதியுடையவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் நிலம் வாங்கும் போது, உத்தேசமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை பயனாளிக்கு மானியமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்றும்; வாங்கப்படும் நிலங்களுக்கு, 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்புவோர் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் அடையலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களான நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களில் மானியம் பெற்று பயனடைந்தவர்களும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால் (TANHODA) செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் “ஒரு துளி அதிகப் பயிர்” திட்டத்திலும் பயனடையலாம் என்றும்; இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாய பெருமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைத் துறையை அணுகலாம் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு என புரளி கிளப்பியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details