மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்டமாக நேற்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாக அனைவராலும் நம்பப்பட்டது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் அவரது சின்னமான ‘பானை’ சின்னத்தை பாமக உள்ளிட்ட கட்சியினர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் விசிகவினருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து காலனி தெருவில் நுழைந்த பாமக உள்ளிட்ட கட்சியினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும், இளைஞர்கள் மீதும் சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக, மூதாட்டி ஒருவர் உடைந்த வீட்டில் அழுதபடி கைகூப்பி அமர்ந்திருக்கும் புகைப்படமும், முதியவர் ஒருவர் அழுதபடியே ஆம்புலன்ஸில் ஏறும் புகைப்படமும், உடைந்த வீட்டுக்குள் சிறுவன் ஒருவன் மிரட்சியான நிலையில் நிற்கும் புகைப்படமும் காண்போரை கலங்க செய்கிறது