அரியலூர் மாவட்டத்தில், சென்னை கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்த நமங்குணம் காலனித் தெருவில் வசிக்கும் 35 வயதாகும் நபருக்கு, கடந்த 30ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து கோயம்பேட்டிலிருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த சுமார் 50 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 19 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அரியலூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டதில், நேற்று ஒரேநாளில் மட்டும் 165 பேர் கோயம்பேட்டிலிருந்து அரியலூர் மாவட்ட எல்லைக்கு வந்த போது அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். 165 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 பேர் சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் தென்பட்டதால், அவர்கள் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மீதமுள்ள 160 பேரும் அரியலூர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட ஐந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளது.