மூன்று மணி நேர தேர்வினை கொண்டுதான் மாணவர்களின் திறனை கண்டறிய முடியுமா என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கேள்வி எழுப்புகிறார். கரோனா வைரஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதால் நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், சிசோடியா இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், இக்கருத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்துவிட்டனர். அதற்கு காரணமாணவர், அனிதா. அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளமாக இப்பெயர் அனைவரின் மனதிலும் ஒலித்துவருகிறது.
12ஆம் வகுப்பு பொது தேர்வில், 1176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அனிதாவுக்கு நேர்ந்தது அரசு பயங்கரவாதம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய, ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகத்திலிருந்து வந்த அனிதா, கல்வி மூலம் விடுதலை பெற்று ஏழை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். தனியார் நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து ஆண்டு கணக்கில், பயின்ற மாணவர்களுடன் அவரால் போட்டி போட முடியவில்லை.
நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத காரணத்தால் பெரும் சோகத்திலும், மன உளைச்சலிலும் இருந்த அனிதா, தன் இன்னுயிரை 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் ஒன்றாம் தேதி மாய்த்துக் கொண்டார். அவர் இறந்து இன்றோடு மூன்றாண்டுகாலம் ஓடிவிட்டது. ஆனால், டாக்டர் அனிதா உருவாவதைத் தடுத்த நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதனை ஒத்திவைக்க முடியவில்லை.
இதுகுறித்து அனிதாவின் சசோதரர் மணிரத்னம் கூறுகையில், "தமிழ்நாடு அரசானது நீட் தேர்வு வேண்டாம் வேண்டாம் என்று கூறினாலும் நீட் தேர்வு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் குழப்பத்திலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை தவிர்த்து நீட் உண்டு, அதன் மூலம்தான் மாணவர்கள் சேர்க்கை என்று தெரிவித்தால் மாணவர்களின் குழப்பமான சூழ்நிலையை தவிர்க்க முடியும். மேலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அனிதா உயிரிழந்தார். அவரது கனவு இன்னும் நிறைவேறவில்லை" என்றார்.