அரியலூர்: சட்டப்பேரவைக்கு ஒரு மாதத்தில் எத்தனை நாள் சென்றேன்? நலத்திட்ட உதவிகளை எத்தனை முறை வழங்கி துவக்கி வைத்தேன்? இதர விஷேசங்கள், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது எத்தனை முறை? போன்ற புள்ளி விவரங்களை தேதி வாரியாக பட்டியலிட்டு அதனை இணையம் வாயிலாக அரியலூர் மாவட்ட எம்.எல்.ஏ பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளன. அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக சின்னப்பா பணியாற்றி வருகிறார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ-வாக க.சொ.க.கண்ணன் பணியாற்றி வருகிறார். எம்.எல்.ஏ கண்ணனின் தந்தை க.சொ.கணேசனும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ-வாக இருந்து, திமுக தலைவர் கருணாநிதியின் குட் புக்கில் இடம் பெற்றவர்.
கண்ணனின் மாமனார் சின்னப்பனும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ஆக இருந்தவர். படிப்பு முடிந்ததும் அரசியலில் நுழைந்த கண்ணன், கட்சி பதவி, ஊராட்சி ஒன்றிய அளவிலான அரசுப் பதவிகளில் இருந்து வந்தார். மேலும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய அவர் வெற்றி வாகை சூடினார்.
ஆனால் ஜெயங்கொண்டம் தொகுதியின் ஒரு குறிப்பிட்ட வட்டார பகுதியில் தான் கண்ணனை, யார் என்று மக்களுக்கு தெரியும். இதர பகுதிகளில் அவரை அவ்வளவாக தெரியாது என்ற நிலை அவர் பொறுப்பேற்ற கால கட்டத்தில் இருந்து வந்தது. அந்த குறையை போக்க கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், உறவினர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் இல்ல விழா நிகழ்ச்சிகள் என ஒன்று விடாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இது போதாது என்று நினைத்த அவர் தற்போது ஹைடெக் முறையில் தன்னைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இதற்கு அவர் எடுத்த ஆயுதம் சமூக வலைத்தளங்களாகும். பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், உள்ளூர் வாட்ஸ் அப் குழு என அனைத்திலும் இணைந்துள்ளார். இந்த குழுக்களில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ஆகிய எனது இம்மாத பணி விவரங்கள் என்ற தலைப்பில் பதிவுகளை அப்டேட் செய்து வருகிறார்.
மேலும் இந்த மாதம் சட்டப்பேரவைக்கு சென்ற நாட்கள், விடுத்த கோரிக்கைகள், கட்சி நிகழ்ச்சிகள், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகள், அரசு விழாக்கள் போன்ற தலைப்புகளை பதிவு செய்து அதில் நிகழ்ச்சி விவரம், கலந்து கொண்டவர்கள் பெயர், புகைப்படங்கள் போன்ற அனைத்து விஷயங்களையும் பதிவு செய்து வருகிறார். நிகழ்ச்சி முடிந்த அரைமணி நேரத்தில் அந்த நிகழ்ச்சி விவரங்கள் குழுக்களில் இடம் பிடித்து விடுகிறது.
ஒரு நாள் கூட விடாமல் இந்த தகவல் பதிவு வேலை தீவிரமாக நடந்து வருகிறது.