தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு திட்டப்பணிகள்; துரிதமாக முடிக்க அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச்செயலர் உத்தரவு! - Collector Ramana Saraswati

அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலையில் இன்று ஆய்வு செய்தனர்.

government project works in Ariyalur
அரசு திட்ட பணிகள்

By

Published : Mar 24, 2023, 1:04 PM IST

அரியலூர்:தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்தும், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பயனாளிகளை அரசின் திட்டங்கள் முறையாக சென்று சேர்ந்துள்ளனவா என கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் செந்துறை ஊராட்சி, செந்துறையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தரிசு நிலத்தொகுப்பினை ஆய்வு செய்து, சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் பயிர்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், பணிகளின் எண்ணிக்கை, நிதி ஒதுக்கீடு, செலவுத்தொகை, முடிவுற்ற பணிகள், நடைபெறும் பணிகள், அலுவலகக் கோப்புகள், பதிவேடுகள் போன்ற பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அரியலூர் ஒன்றியம், சென்னிவனத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு அமைத்தல் பணியினை பார்வையிட்டு தரிசு நிலத் தொகுப்பின் மூலம் பயன்பெற உள்ள நிலங்களின் மொத்த பரப்பளவு மற்றும் பயிரிடப்பட்டிருக்கும் வேளாண் பயிர்கள் குறித்தும் விவசாயிகள் மற்றும் மொத்த பரப்பளவு மற்றும் பயிரிடப்பட்டிருக்கும் வேளாண் பயிர்கள் குறித்தும் விவசாயிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்து, இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகளை அறிவுறுத்தினார்.

இதே போன்று வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.9.4 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தடி நீர் ஆதார அமைப்பு (போர்வெல்) அமைக்கப்பட்டுள்ளதையும் அதில் பொருத்தப்பட்டுள்ள மோட்டாரின் அளவு குறித்து கேட்டறிந்தார். மேலும், மின் இணைப்பு வழங்கி விரைவாகப் பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து, அரியலூர் ஒன்றியம், ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் புள்ளிக்குளம் சாலை முதல் காலனிக்குட்டை அருகில் கிடைமட்ட வடிகட்டியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் 144 மீ-க்கு அமைத்தல் பணியையும், ரூ.5.03 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரெட்டிப்பாளையம் காலனிகுட்டை மேம்படுத்துதல் பணியையும், ரூ.6.89 லட்சம் மதிப்பீட்டில் வி.கைகாட்டி திருப்பதி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை 133 மீ-க்கு அமைத்தல் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அஸ்தினாபுரத்தில் ரூ.5.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உலர்களம் அமைத்தல் பணியையும், வாலாஜநகரத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டட கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், பொது சுகாதாரத் துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, இத்திட்டத்தின் பயன்கள் குறித்தும், மருத்துவர்கள் வருகை, மாத்திரைகள் வழங்கப்படும் கால அளவு, சரியான நேரத்தில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவது குறித்தும் பயனாளியிடம் கேட்டறிந்து ஆய்வுசெய்தார். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்துவதுடன் பயனாளிகளும் இத்திட்டத்தினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப் பணிகள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா அறிவுறுத்தினார்.

பின்னர், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலையில் அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

தற்பொழுது அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் விவரம் மற்றும் முடிவுற்ற பணிகள் குறித்தும் கேட்டறிந்து பணிகளை விரைவில் முடிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ஒற்றை யானையை பிடிக்க மீண்டும் 2 கும்கிகள் வருகை: 2-வது முறையாக "ஆப்ரேசன் கருப்பு"

ABOUT THE AUTHOR

...view details