அரியலூர்:தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில், செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேர்வதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தனர்.
தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், மலங்கன் குடியிருப்பு ஊராட்சி மற்றும் மணகெதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவு குறித்தும், மாணவர்களின் விவரங்கள் குறித்தும் ஆய்வுசெய்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அணைக்குடம் வண்ணான் கேணி அருகில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.7.49 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் அமைத்தல் பணியினை பார்வையிட்டு, இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அணைக்குடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.30 லட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பள்ளி கழிவறை கட்டுமானப் பணியினை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோடங்குடி ஊராட்சி, வடக்கு தெருவில் ரூ.8.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணியையும், சீனிவாசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டட கட்டுமானப் பணியினையும் பார்வையிட்டு, கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். பின்னர் சீனிவாசபுரம் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, மாணவர்கள் வருகை பதிவேடு, உணவு பொருட்கள் இருப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்கப்படுவதின் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.