அரியலூர்: கோவிந்தபுத்தூர் வடக்குத்தெரு சின்னதுரை மகன் பிரபு. இவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன்.15ஆம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கினேன். அப்போது, அந்த நிலத்துக்கு ராதாகிருஷ்ணன் அவரது உறவினர்கள் சிவக்கொழுந்து சுகன்யா ஆகிய மூன்று பேர் பெயரில் பட்டா இருந்தது.
கிரையம் கொடுத்து நிலத்தை வாங்கி விட்டதால், எனது பெயருக்குப் பட்டா வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் கூறினேன். ஆனால், ஏற்கனவே இருந்த பட்டாவில் எனது பெயரையும் சேர்த்துக் கூட்டுப் பட்டாவாக வழங்கப்பட்டது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலரை அணுகி நிலவரி செலுத்தத் தயாராக இருக்கிறேன். எனது நிலவரியைப் பெற்றுக் கொண்டு ரசீது வழங்க வேண்டும் என்று கோரினேன்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர் என்னிடமிருந்து நிலவரி பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இதன் மூலம் பொதுமக்களுக்கு அவர் சேவையாற்றவில்லை. எனவே அவர் எனக்கு இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவானது அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதிபதி ராம்ராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.