அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இலங்கைச்சேரி கிராமத்தில் வசிப்பவர் இளையராஜா. இவர் நேற்றிரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். வழக்கம்போல் காலை எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அடையாளம் தெரியாத நபர்களின் கைவரிசை இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளேச் சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த இரும்பு பெட்டியில் இருந்த 10 சவரன் நகையைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் வைத்திருந்த சூட்கேஸைக் காணவில்லை என தேடியதில் வீட்டின் பின்புறம் சுமார் 10 மீட்டர் தொலைவில் சூட்கேஸ் உடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதில், இளையராஜா வைத்திருந்த 34 ஆயிரம் பணம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து இளையராஜா செந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் அடையாளங்களைச் சேகரிக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். இதனிடையே, காவல் துறையினர் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பால்கனி வழியாக செல்போன் லேப்டாப் திருட்டு - இருவர் கைது