டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியின் எஃப்-52 பிரிவில் நடைபெற்ற பதக்கத்கிற்கான போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் பங்கேற்றார்.
முறிந்தது ஆசிய சாதனை
இப்போட்டியில், முதல் இரண்டு முயற்சிகளில் வினோத் குமார் 17.46 மீ, 18.32 மீ என தூரத்திற்கு வட்டை எறிந்தார். அடுத்த இரண்டு முயற்சிகளில் முறையே 17.80 மீ, 19.12 மீ தூரத்திற்கு வட்டை வீசிய நிலையில், அடுத்த முயற்சியில் 19.91 தூரத்திற்கு வீசி ஆசிய சாதனையை முறியடித்தார். அவர் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடித்து வந்தார்.
ஆனால், குரேஷிய வீரர் சண்டார் வெலிமிர் 19.98 மீ தூரத்தை கடந்து வீசியதால், வினோத் இரண்டாம் இடத்தில் இருந்த வினோத் குமார் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
மூன்றாவது பதக்கம்
மேலும், போட்டி முடிவில் வினோத் மூன்றாம் இடத்தில் இருந்தார். இதன்மூலம், வினோத் குமார் வெண்கலம் பதக்கம் வென்று டோக்கியோவில் இந்தியாவிற்கான மூன்றாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். முன்னதாக, மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷாத் குமார் ஆகியோர் இன்று (ஆக.29) வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத்திறன் வகைப்பாட்டில் சந்தேகம்
இந்நிலையில், அவருக்கு அறிவிக்கப்பட்ட வெண்கலப் பதக்கம் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வினோத் குமார் எஃப்-52 பிரிவில் இடம்பிடித்திருந்தார். எஃப்-52 மாற்றுத்திறன் வகைப்பாடுகளைக் குறிக்கும் ஒரு பிரிவு. கால்களில் பலவீனமான தசை சக்தி, கால்கள் ஒரு வரம்புக்குள்பட்டு இயங்குதல், மூட்டு குறைபாடு அல்லது கால் நீள வேறுபாடு கொண்ட மாற்றுத் திறனாளியான வீரர்கள் இந்த எஃப்-52 பிரிவில் இடம்பிடிப்பார்கள்.
இதில், வினோத் குமாரின் மாற்றுத்திறன் வகைப்பாடு மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் எழுந்ததன்பேரில், வினோத் குமாரின் முடிவுகள் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இறுதி முடிவுகள், நாளை (ஆகஸ்ட் 30) உறுதிசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான வினோத் குமார், பயிற்சியின்போது ஒரு செங்குத்தான பனிப்பாறையின் உச்சியிலிருந்து தவறிவிழுந்ததால், அவர் கால்களை இழந்துள்ளார். இவரது தந்தை 1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: PARALYMPICS: உயரம் தாண்டுதலில் வெள்ளி; நிஷாத் குமார் அசத்தல்