டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளி வென்று, இந்தத் தொடரின் முதல் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார். இதையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மூத்த நடிகர் அனில் கபூர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவினாபென் படேலின் வெற்றிப் புகைப்படத்தை பதிந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அற்புதமான தருணம்
மேலும், நடிகை டாப்ஸி தன் ட்விட்டர் பக்கத்தில்," இந்தியா டேபிள் டென்னிஸில் முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. அதுவும், வெள்ளிப் பதக்கம். வாழ்த்துகள் பவினாபென்" எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அபிஷேக் பச்சன், "மீண்டும் ஓர் அற்புதமான தருணம் நிகழ்ந்துள்ளது. அசத்தலாக விளையாடி இந்தியாவிற்கு வெள்ளி வென்று கொடுத்ததற்கு வாழ்த்துகள்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விக்கி கவுஷல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பவினாபென் இந்திய தேசியக் கொடியோடு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து," பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவில் பங்கேற்று வெள்ளி வென்று, ஒரு வரலாற்றை படைத்துவிட்டீர்கள் பவினாபென்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சாம்பியனிடம் தோல்வி
இன்று (ஆக.29) நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், உலக சாம்பியனான சீன வீராங்கனை யிங் ஜோ (Ying Zhou) உடன் மோதினார். 19 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், யிங்கிடம் 0-3 என்ற செட் கணக்கில் பவினாபென் படேல் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், 32 வயதான யிங் ஜோ ஆறாவது முறையாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2008, 2012 ஒலிம்பிக் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். யிங் ஜா ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் பவினாபென் படேல்