டெல்லி:பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. செப்டம்பர் 5 வரை நடைபெறுகிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டியாகும். இப்போட்டிகளில், இதுவரை இல்லாத அளவில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இவர்களுக்கு தமிழ்நாட்டு பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு கேப்டனாகத் தலைமை தாங்குகிறார். இவர் தலைமையில் தேசியக்கொடியை ஏந்தி, இந்திய வீரர்கள் இன்று அணிவகுத்துச் செல்ல உள்ளனர். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இந்தப் போட்டிகள், நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பார்வையாளர்களின்றி நடைபெறுகிறது.
வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்
இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். முன்னதாக, பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், ஆடவர் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.