சென்னை : 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் ஆடவர் அணி பதக்கம் வென்றது.
மகளிர் அணியினரும் மாபெரும் போராட்டம் நடத்தி அரையிறுதிக்கு சென்று இந்தியர்களின் மனதை வென்றனர். இந்நிலையில், மகளிர் ஹாக்கியின் தோல்விக்கு அணியிலுள்ள பட்டியலின வீராங்கனைதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டி அவரின் வீடு முன்பு சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர்கள் சிலரை கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்தை விசிக தலைவரும், இரு முறை நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில், “#ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி அணி வெற்றிபெறாததற்கு இந்திய அணியில் பட்டியல் சாதியினர் இருப்பதை சாதி வெறியர்கள் குற்றம் சாட்டியிருப்பது அநாகரீக நடத்தையின் உச்சம். இத்தகைய கொடூரமான நடத்தையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நாங்கள் எங்கள் திறமையான வீரர்களுடன் நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது. இந்நிலையில் வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பு ஆதிக்க சாதியை சேர்ந்த இருவர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் சிறையில் கம்பியெண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோற்றது அணியல்ல, இந்தியா- வாழ்த்துகள் வந்தனா கட்டாரியா!