டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றது. இதில், இந்திய அணி மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தும், அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்தியும் 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளது.
பிரிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறலாம் என்ற நிலையில் தற்போது 'ஏ' பிரிவில் நான்காவது இடத்தை உறுதிசெய்ய இந்தியாவிற்கும் அயர்லாந்துக்கும் கடுமையான போட்டி நிலவிவருகிறது.
அயர்லாந்து அணி இதுவரை விளையாடியுள்ள நான்கில் மூன்று போட்டிகளில் தோற்று, ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது.
இந்தியாவா அயர்லாந்தா?
காலிறுதிக்குத் தகுதிபெறுமா இந்திய மகளிர் ஹாக்கி இந்நிலையில் அயர்லாந்து அணி, இங்கிலாந்து அணியுடன் இன்று மாலை மோத உள்ளது. இந்தப் போட்டியில், அயர்லாந்து தோல்வியடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ இந்திய அணிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், பெரிய கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றிபெற்றுவிட்டால் இந்திய அணியின் காலிறுதிக் கனவு தகர்ந்துவிடும்.
ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி ஏற்கெனவே காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், அயர்லாந்து - இங்கிலாந்து போட்டியை எதிர்பார்த்து இந்திய மகளிர் அணி காத்துக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஸாரி இந்தியா- அதானு தாஸ் உருக்கம்!