டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஹாக்கி குரூப் போட்டிகள் இன்று (ஜூலை 24) தொடங்கின. குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
ஆரம்பத்தில் அதிர்ச்சி
ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து வீரர் கேன் ரசல் அணிக்கு முதல் கோலை அடித்து நியூசிலாந்திற்கு 1-0 என முன்னிலை தந்தார்.
அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட இந்தியா 10ஆவது நிமிடத்தில் தனது கோல் கணக்கைத் தொடங்கியது. இந்திய வீரர் ரூபின்தர் பால் அணியின் முதல் கோலை அடித்தார்.
இந்தியா வெற்றி
மற்றொரு முன்கள வீரர் ஹர்மன்பிரீத் சிங் 26, 33 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து இந்திய அணியை 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.
இருப்பினும், நியூசிலாந்து அணியும் தன் பங்கிற்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்துவந்தது. ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் ஜென்னிஸ் அணிக்கு இரண்டாவது கோலை அடிக்க ஆட்டம் 3-2 என்ற கணக்கில் பரபரப்பான நிலைக்கு வந்தது.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் நியூசிலாந்து கோலடிக்க கடுமையான முயற்சியை செய்த போதிலும் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அபார ஆட்டத்தை வெளிபடுத்தி நியூசிலாந்தின் கோல் போடும் முயற்சியை தடுத்து நிறுத்தினார்.
இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது. நாளைய (ஜூலை 25) போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதையும் படிங்க:Tokyo Olympics: தமிழ்நாட்டின் இளவேனில் ஏமாற்றம்