ஒலிம்பிக் தொடரில் மீராபாய் சானு, பி.வி.சிந்து, லவ்லினா ஆகியோருக்கு அடுத்து மல்யுத்தத்தில் ரவிக்குமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி, இந்தியாவிற்கு நான்காவது பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.
டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் மல்யுத்தம் ஆடவர் ஃப்ரீ ஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் இன்று (ஆக.4) நடைபெற்றன.
இதன் ஒரு அரையிறுதியில், இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூரிஸ்லாம் சனாயேவ் உடன் மோதினார். இதற்கு முன் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பல்கேரிய வீரரை ரவிக்குமார் வீழ்த்தியிருந்தார்.
முழுமையான ஆதிக்கம்
இப்போட்டியின் முதல் சுற்றில், ரவிக்குமார் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், இரண்டாவது சுற்றில் நூரிஸ்லாம் சற்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
இறுதிநேரத்தில் சுதாரித்துக்கொண்ட ரவிக்குமார், நூரிஸ்லாமை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதனால், இந்தியாவிற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாவது இந்தியர்
ஒலிம்பிக் வரலாற்றில் கேடி ஜாதவ், சுஷில் குமார், யோகேஷ்வர் தத், சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு அடுத்து மல்யுத்தத்தில் பதக்கம் பெறும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரவிக்குமார் பெற்றுள்ளார்.
குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைலவ்லினா இன்று வெண்கலப் பதக்கம் வென்று, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈட்டி எறிதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா