டோக்கியோ : ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கத்தை பதிவு செய்துள்ளது. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் யார் ரைபிள் போட்டியில் யாங் தங்கம் வென்றார். இரண்டாம் இடத்தை ரஷ்யாவும், மூன்றாம் இடத்தை சுவிட்சர்லாந்தும் பெற்றுள்ளன.
ஒலிம்பிக் போட்டித்தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று பதக்கங்களுக்கான போட்டிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் தனிநபர் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் தனது முதல் தங்கத்தை பதிவு செய்து சீனா அசத்தியுள்ளது.
அந்நாட்டின் யாங் கியான் (Yang Qian) தங்கம் வென்றார். இரண்டாம் இடத்தை ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா (Anastasiia Galashina) பெற்றார். மூன்றாம் இடத்தை சுவிட்சர்லாந்து வீராங்கனை நினா கிறிஸ்டியன் (Nina Christen ) தனதாக்கினார்.
ஆக டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை சீனாவும், முதல் வெள்ளியை ரஷ்யாவும், முதல் வெண்கலத்தை சுவிட்சர்லாந்தும் பெற்றுள்ளன. முன்னதாக இன்று காலை நடைபெற்ற தகுதிச் சுற்றில், இந்தியா சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாளறிவன், அபூர்வி சந்தேலா ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.
மொத்தமுள்ள 60 ஷாட்களில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்த இளவேனில் தரவரிசை பட்டியலில் 16ஆவது இடத்தை பிடித்தார். அதேப்போல் மற்றொரு வீராங்கனையான அபூர்வி சந்தேலா 621.9 புள்ளிகள் எடுத்து 26ஆவது இடத்தை பிடித்தார்.