டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி பதக்கம் ஏதுமின்றி நாடு திரும்புகிறது. ஒவ்வொரு இந்தியனும் இதை நினைத்து கவலையில் இருக்க சிலர் மட்டும் கொண்டாடினார்கள்.
ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அனைவரும் இங்கு இந்தியர்கள் இல்லை. அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதிய இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்தத் தோல்விக்கு இந்திய ஹாக்கி அணியில் அதிக தலித் வீரர்கள் இருந்ததே காரணம் என கூறி, ஹரித்வார் அருகே ரோஷனாபாத்தில் இருக்கும் இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா வீட்டுக்கு முன்பு பட்டாசு வெடித்து சிலர் கொண்டாடினார்கள்.
அனைவருக்கும் தேச பக்தி வேண்டுமென்று பாஜக முழங்கிக்கொண்டிருக்கும் சூழலில் தேசிய விளையாட்டு அணியில் கலந்துகொண்டவரை சாதிய ரீதியாக அவமதிக்கும் சூழலும் நிலவுகிறது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனங்களும் பெரிதாக எழவில்லை.
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உண்டு.
ஆனால், விமர்சனம் வைக்கும் பெரும்பாலானோர் இந்த சம்பவத்தை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். இதே சம்பவம் ஒரு கிரிக்கெட் வீரருக்கு நடந்திருந்தால் (நடக்காது என்பது வேறு விஷயம்) அது எவ்வளவு பெரிய செய்தியாக மாறியிருக்கும் என்பதை நாடறியும்.
அடுத்த தேசத்திற்கு சென்று சொந்த தேசத்துக்காக விளையாட்டில் போராடிக்கொண்டிருக்கும் ஒரு வீராங்கனைக்கு இந்தியாவில் அளிக்கப்படும் உச்சபட்ச மரியாதை இதுதானா என்ற கேள்வியை சமூக செயற்பாட்டாளர்கள் எழுப்புகின்றனர்.
விளையாட்டு வீரர்களுக்கு உடல்நிலை எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மனநிலை. ஜப்பானில் இருக்கும் வந்தனா கட்டாரியாவுக்கு அவர் வீட்டில் நடந்த சம்பவம் தெரிந்திருந்தால் உளவியல் ரீதியாக நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார். இப்படிப்பட்ட சூழல் நிச்சயம் விளையாட்டுக்கும், அவருக்கு ஆரோக்கியமானது அல்ல.
வீட்டின் முன்பு அவ்வாறு நடந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். இங்கு உடனடி கைதைவிட நிரந்தரமான அமைதியை பலரும் விரும்புகின்றனர். அதுதான் இந்தியர்களை ஆரோக்கிய சூழலுக்குள் அழைத்து செல்லும்.
ஹாக்கியை தேசிய விளையாட்டு என்று பலரும் கருதிக்கொண்டிருக்கும் சூழலில், தேசியம் நமது கொள்கையாக இருக்க வேண்டும் என கூறும் ஒன்றிய அரசு ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்யாமல் ஒடிசா மாநில அரசு செய்கிறது.
முக்கியமாக, ஹாக்கி தேசிய விளையாட்டு என்று கூறிக்கொள்ளும் நாட்டில் பெரிதாக எந்த உற்சாகமும், வரவேற்பும் அதற்கு கொடுக்காத நிலையிலும் தொடர்ந்து ஹாக்கி வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்துவருகின்றனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி, தடகளம், மல்யுத்தம், குத்துச்சண்டை என பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இது இந்தியாவில் மற்ற விளையாட்டுக்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க நிச்சயம் ஒரு பாதையை அமைத்துக்கொடுக்கும்.
ஆனால், அப்படி ஆர்வம் வந்தாலும் இப்படி சாதிய ரீதியாக ஒருவரை அந்த வட்டத்துக்குள் அடக்கினால் வருங்காலத்தில் விளையாட்டு வீரர்கள் உருவாவதற்கு உளவியல் ரீதியான தயக்கத்தை கொடுக்கும் என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.
கடந்த தோல்வியின்போது, தாழ்த்தப்பட்டவள், பிற்படுத்தப்பட்டவள் என்று சிலரால் எந்த கட்டாரியா வசை சொற்களையும், உளவியல் ரீதியாக கஷ்டத்தை சந்தித்தாரோ அதே கட்டாரியாதான் இன்றைய போட்டியில் இந்தியாவும், தி கிரேட் பிரிட்டனும் 2-2 என்று சமநிலையில் இருந்தபோது மூன்றாவது கோல் அடித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.
தோற்றது ஹாக்கி அணி அல்ல இந்தியா எனும் நாடு - வெல்டன் வந்தனா பெண்கள் ஹாக்கி அணி கிரேட் பிரிட்டனிடம் விளையாட்டரங்கில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் இந்தியா எனும் நாடு மனித குல அரங்கில் தோற்று நிற்கிறது. வந்தனா கட்டாரியா வென்றிருக்கிறார் என்பது மட்டும் நிதர்சனம். வெல்டன் வந்தனா கட்டாரியா....