2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முறையே 39, 38, 27 தங்கங்களுடன் முதல் மூன்று இடங்களை பிடித்தது. இந்தியா 48ஆவது இடத்தோடு தொடரை நிறைவு செய்திருந்தது.
ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு நடைபெற்ற இந்த ஒலிம்பிக்கில் கண்ணீர் தருணங்கள், ஆச்சர்ய நிகழ்வுகள் பல நடந்தேறின. அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் வேறொரு இடத்தில் தொலைந்து போன ஜமைக்கா வீரர் ஒருவருக்கு, பெண் ஒருவர் பணம் கொடுத்து அவரை சரியான நேரத்தில் போட்டிக்கு அனுப்பி வைத்த கதைதான் சமீபத்திய ஹாட் டாபிக்.
பாட்டு கேட்டதால் பாதை தவறிய வீரர்
அந்த வீரர் வேறு யாரும் இல்லை, ஆடவர் 110மீ தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஹான்ஸ்லே பார்ச்மென்ட் தான். போட்டி நடைபெற்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று தடகள மைதானத்திற்குச் செல்லும் பேருந்திற்கு பதிலாக நீச்சல் அரங்கிற்கு செல்லும் பேருந்தில் ஹான்ஸ்லே தவறாக ஏறியிருக்கிறார்.
பேருந்தில் ஏறிய உடன் பாட்டு கேட்டே சென்றதால் பேருந்து செல்லும் பாதையை கவனிக்காமல் இருந்துள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகே, பேருந்து வேறு பாதையில் செல்வதை பார்த்துள்ளார்.
மீட்பராக வந்த பெண்
உடனடியாக, பேருந்தை நிறுத்தி போட்டி அலுவலர்களை தொடர்பு கொண்டுள்ளார். வேறு பேருந்தில் ஏறி விரைவாக தடகள மைதானத்திற்கு வரும்படி அவர்கள் அறிவுறித்தியுள்ளனர். ஆனால், ஹான்ஸ்லேவாவோ என்ன செய்வது? ஏது செய்வது? என்று குழப்பத்தில் இருந்துள்ளார்.