டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை பி.வி. சிந்து எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி. சிந்து முதல் கேமை 21-க்கு 13 என்ற புள்ளிக்கணக்கில் தன்வசமாக்கினார். தன் நாட்டிற்காக பதக்கம் வெல்லத் துடித்த பி.வி. சிந்து இரண்டாவது கேமை 21-க்கு 15 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.
பி.வி. சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்ற சில நிமிடங்களில் இந்தியாவின் பிரதமர் முதல் சாமானியர்கள் வரை அனைவருமே வாழ்த்து மழையைப் பொழியத் தொடங்கினர். தனது எட்டு வயதிலேயே இந்தச் சாதனைக்கான முதல் அடியை எடுத்துவைத்தவர் பி.வி. சிந்து.
சாதனைக்காரி சிந்து!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 1995 ஜூலை 5இல் பி.வி. ராமன் - பி. விஜயா இணையருக்குப் பிறந்தவர் புசர்லா வெங்கட் சிந்து. பெற்றோர் இருவருமே சர்வதேச கைப்பந்தாட்ட வீரர்கள் என்பதால் விளையாட்டு மீதான ஆர்வம் பி.வி. சிந்துவுக்கு சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. அதிலும் அவரின் தந்தை ராமன் விளையாட்டின் உயரிய விருதான அர்ஜுனா விருது வாங்கியவர்.
தந்தையின் ஊக்கத்தில் பயிற்சிபெற்ற பி.வி. சிந்து ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்து, பல சாதனையாளர்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார்.
பெண் குழந்தைகளின் பெருமை
இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் பேசியபோது, பதக்கத்தை வெல்லும் நிமிடம் வரை சிந்து கண்ட பதற்றம் முதல் ஆனந்தக் கண்ணீர் வரை அனைத்தையும் சில வரிகளில் தெரிவித்தனர்.
தன் மகள் சிந்துவை பெண் குழந்தைகளின் பெருமை எனப் பேசத் தொடங்கிய ரமணா, "பெண்கள் ஆண்களைவிட சிறந்தவர்கள் என்பதற்கு ஒலிம்பிக் சிறந்த உதாரணம். நம் நாட்டிற்கு பெண்கள்தான் இரண்டு பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
சிந்துவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் பார்க் டா சாங்குக்கு (தென்கொரியா) நன்றி சொல்ல விரும்புகிறேன். இதேபோல் சிந்துவுக்கு ஆதரவாக இருந்த ஒன்றிய அரசு, பேட்மிண்டன் சம்மேளனம், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி. நாட்டிற்காக சிந்து பதக்கம் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி.
கண் கலங்கிய சிந்து
அதுவும் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என் மகள் என்பது பெருமையாக இருக்கிறது. அரையிறுதியில் தோல்வி அடையும்போது சிந்து கண் கலங்கினார். ஆனால் திரும்பி களத்திற்கு வந்த நல்ல ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.
எப்போதும் ஒரே வேகத்தில் ஒரே ஆட்டத்தை வெளிப்படுத்திவிட முடியாது. மனம் தளராமல் அடுத்தப் போட்டியில் பதக்கத்தை வெல்ல ஊக்கமளித்தேன். எப்போதுமே மூன்றாவது, நான்காவது போட்டிகள் கடுமையாகத்தான் இருக்கும். போட்டிகளில் அழுத்தம் இருந்தாலும், சிந்து தன் போராட்டத்தை நிறுத்தாமல் விளையாடினார்" என்றார் பெருமிதம் பொங்க.
விளையாட்டின் மீது தீரா பசி
தொடர்ந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் பேசத்தொடங்கினார் சிந்துவின் தாயார் விஜயா, ”சிந்துவின் வெற்றி ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கத்தை அவர் வாங்காமல் போனால்கூட வெண்கலத்தை நாட்டுக்கு வாங்கிக் கொடுத்தது பெருமையாக இருக்கிறது. எந்தப் பதக்கமாக இருந்தாலும், பதக்கம் பதக்கம்தானே” என்கிறார் புன்னகையுடன்.
சிந்துவின் பெற்றோர் பேட்டி சிந்து மேற்கொண்டு விளையாடுவாரா, அவரது அடுத்த திட்டம் என்னவென எழுப்பிய கேள்விக்கு, ’’நிச்சயம் விளையாடுவார். இப்போது அவருக்கு 26 வயதாகிறது. வயது அதிகரிக்கும்போது விளையாட்டில் அந்த அனுபவம் தெரியும்.
சிந்து விளையாடும்போது நான் அதைப் பார்க்கிறேன். ஆனால் விளையாட்டின் மீது தீரா பசியுடைவள் சிந்து. மகிழ்ச்சியுடன் விளையாடுகிறாள். தொடர்ந்து விளையாடுவாள்” என்றார் சிந்துவின் தந்தை ரமணா.
தொடரட்டும் சிந்துவின் சாதனைகள்...
இதையும் படிங்க: ’சிந்து வென்ற பதக்கங்கள் பெண் குழந்தைகளின் பெருமை’- பி.வி. சிந்துவின் தந்தை நெகிழ்ச்சி