டோக்கியோ: 2012ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து, 11 வயது சிறுமியின் முதுகுத்தண்டை பதம்பார்த்ததுடன் அவரைச் சக்கர நாற்காலிக்குத் தள்ளியது. அந்த விபத்து கொடுத்த ரணத்துடன் ஒன்பது ஆண்டுகள் கழித்து அமர்ந்த வண்ணம் அந்தச் சிறுமி பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து தங்க மங்கையாக ஜொலிக்கிறார்.
அவர்தான் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கம் பெறும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்றது மட்டுமில்லாமல், இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலகச் சாதனையைச் சமன்செய்து மிரட்டியுள்ளார்.
குதூகலத்தில் அவனி
பல்வேறு இடர்களைத் தகர்த்து, தங்கம் வென்றது குறித்து அவனியிடம் கேட்டபோது, "என்னால் இந்தத் தருணத்தைச் சொற்களால் விவரிக்க முடியவில்லை. தற்போது நான் உலகத்தின் உச்சியில் இருப்பதுபோல் உணர்கிறேன்" எனக் குதூகலித்தார்.
ஒரு நிதானத்திற்கு வந்தபின் அவனி பேசுகையில், "நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். இந்த ஒரு வாய்ப்பில் இலக்கில் சுட்டே ஆக வேண்டும். வேறு ஒன்றும் என் சிந்தனையில் இல்லை. அந்த ஒரு வாய்ப்பில் சுட்டால்தான் உண்டு என்ற நிலையில், அதை அடைந்துவிட்டேன்.