டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடு திரும்பினார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அவரை நேரில் சந்தித்தும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்திய தடகள கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு உரையாற்றினார்.
அதன்பிறகு, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.
அவரது உடல்நிலை சற்று தேறியதையடுத்து, டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இருப்பினும், அவர் உடல்நிலை முழுமையாகச் சரியாகவில்லை என்றுதான் கூறப்பட்டது.