தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா 2, சீனா 274 - ஒலிம்பிக் உணர்த்தும் பாடம் என்ன?

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா செயல்பாடு சிறப்பாக உள்ளது என ஆறுதலுக்கு கூறிக்கொண்டாலும், சர்வதேச அளவில் ஒப்பிட்டால் இந்தியா பயணிக்க வேண்டிய தூரம் மிக நீளமானது. சீனாவை, போர்க்களத்தில் மட்டுமல்லாமல், விளையாட்டுக் களத்தில் எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டியது அவசியமான ஒன்று.

ஒலிம்பிக்கில் இந்தியா
ஒலிம்பிக்கில் இந்தியா

By

Published : Aug 8, 2021, 7:56 PM IST

Updated : Aug 8, 2021, 8:33 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த ஒலிம்பிக் இந்தியாவுக்கு சிறப்பான ஒலிம்பிக்காகவே அமைந்தது.

ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது. இதன்மூலம் 2012ஆம் ஆண்டில் ஆறு பதக்கங்கள் என்ற தனது அதிகபட்ச எண்ணிக்கையை இந்த ஒலிம்பிக்கில் இந்தியா தாண்டியுள்ளது.

முதல்நாளில், இந்திய வீராங்கனை மீரா பாய் சானு, பளுத்தூக்கும் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு சிறப்பான ஆரம்பத்தைத் தந்தார். பின்னர், பி வி சிந்து ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக பேட்மிண்டனில் பதக்கம் வென்றது, 41 ஆண்டுகளுக்குப் பின் ஆடவர் ஹாக்கி அணி பதக்கம் வென்றது என பல நம்பிக்கை அளிக்கும் வெற்றிகளை இந்தியா கண்டது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தடகளப் போட்டியில் இந்தியா இதுவரை பதக்கமே வெல்லவில்லை என்ற நூற்றாண்டு குறையை போக்கும் விதமாக, இந்தியாவுக்கு முதல் பதக்கத்தையே தங்கப் பதக்கமாக நீரஜ் சோப்ரா வென்றார்.

13 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிம்பிக் அரங்கில் நீரஜ் சோப்ரா வென்ற தங்கத்தால் ஒலித்தது.


இப்படி டோக்கியோ ஒலிம்பிக்கில் பெருமை மிகு சாதனைகளை நாம் ஒருபுறம் பட்டியலிட்டுக்கொண்டாலும், உண்மையிலேயே சர்வதேச அரங்கில் இந்தியா விளையாட்டுத்துறையின் இடம் என்ன என்பதை இந்த தருணத்தில் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும்.இதற்கு நமது அண்டை போட்டியாளரான சீனாவே சிறந்த பாடமாக அமைவார்கள்.

சீனா தனது முதல் தங்கத்தை 1952ஆம் ஆண்டு ஹெலன்ஸ்கி ஒலிம்பிக்கில் வென்றது. அதன்பின்னர் சர்வேச அரசியல் உறவு கொள்கை நிலைப்பாடு காரணமாக 1980ஆம் ஆண்டு வரை சீனா ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. 1984ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்கில் சீனா வென்றிருந்த தங்கத்தின் எண்ணிக்கை ஒன்று மட்டுமே.

இந்தியாவோ தனது முதல் தங்கப் பதக்கத்தை 1928ஆம் ஆண்டு வென்றது. 1928ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை இந்திய ஆடவர் ஹாக்கி அணி தொடர்ந்து ஆறுத் தங்கங்களை வென்று, உலக அரங்கில் அசைக்க முடியாத ஜாம்பவானாக இருந்தது. 1980ஆம் ஆண்டுவரை இந்தியா எட்டுத் தங்கங்களை வென்றுள்ளது. இவை அனைத்தும் ஹாக்கி மூலம் கிடைத்தவையே.

1984வரை சீனா ஒரு தங்கம், இந்தியா எட்டுத் தங்கம் என்று இருந்த நிலையில், அடுத்த 37 ஆண்டுகளில் அதாவது 2021 வரை சீனா கூடுதலாக 274 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியாவோ கூடுதலாக இரண்டு தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.

சீனா 274, இந்தியா வெறும் இரண்டு. இங்குதான் இந்தியா சீனாவிடம் கற்க வேண்டிய பாடம் உள்ளது. உலக நாடுகள் ஒலிம்பிக்கை தங்களின் முக்கிய அரங்காகக் கருதுகின்றன.

நவீன ஜனநாயக காலத்தில் உலக பெருஞ்சக்திகள் போர்க்களத்தைப்போல, விளையாட்டுக் களத்தைதான் தங்கள் சக்தியை வெளிப்படுத்தும் அரங்காக பாவிக்கின்றன. அதனால்தான், அமெரிக்கா, ரஷ்யா, கடந்த 30 ஆண்டுகளாக சீனா என அனைத்து வல்லாதிக்க சக்திகளும் ஒலிம்பிக்கில் தங்களின் திறனை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்க அதிக முக்கியத்துவம் தருகின்றன.

குறிப்பாக, ஒலிம்பிக்கை தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. 1984 வரை ஒரு தங்கம் மட்டுமே வென்றிருந்த சீனா, 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு என்ற பெருமைக்குரிய நிலையை பெற்றது.


ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் தொடர்ந்து முதலிடத்தை பெற்ற அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்து 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்தது.

ஆனால் இந்தியாவோ இதுவரை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறவே இல்லை. காரணம், ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அளவிற்கு தரமான விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா கொண்டிருக்கவில்லை என்பதே யதார்த்தம்.


அடுத்து வரும் மூன்று ஒலிம்பிக்குகளை முறையே பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தான் நடத்தவுள்ளன. இந்தியாவுக்கு அடுத்த வாய்ப்பு என்றால் 2038இல்தான்.

உலகில் சீனாவுக்கு அடுத்த அதிக மனித வளம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. 1991ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்குக்குப் பின் பொருளாதார ரீதியாகவும் இந்தியா நல்ல ஏற்றத்தைக் கண்டுள்ளது.


தற்போது உலகின் பெரிய பொருளாதார சக்திகளில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் முன்னணி நாடாகத் திகழ்கிறது. ஆனால் இந்த முன்னேற்றம் விளையாட்டுத் துறையில் பிரதிபலிக்கவில்லை என்பதே உண்மை.

பெரும்பாலான விளையாட்டுக்கள் உடல்தகுதியை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் உருவாக வேண்டும் என்றால் அதன் ஆரம்பம் சுமார் 10 வயதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். 18-21இல் அவர்கள் தனது உச்ச பார்மை பெற்றிருக்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் தயார் செய்யப்படுவது இப்படியே.

ஆனால் இந்தியாவிலோ இத்தகைய சூழல் வாய்த்தவர்கள் மிகவும் சொற்பமே. உரிய திறன் இருந்தும், பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையிலிருந்து உரிய பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் பெற்றவர்கள் மிகவும் அரிது.

படித்து நல்ல வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதையே அடிப்படை மனநிலைக் கொண்ட பெரும்பான்மை இந்திய சமூகத்தில், தனது அசாத்திய முயற்சியால்தான் ஒவ்வொரு சர்வதேச தரம்வாய்ந்த வீரர் உருவாகிவர வேண்டியுள்ளது.

இந்த வீரர்களும் பஞ்சாப், ஹரியானா, வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றிலிருந்துதான் பெரும்பாலான வீரர்கள் உருவாகிவருகின்றனர். தனிநபர் போட்டியில் இந்தியா இதுவரை 23 பதக்கங்களை பெற்றுள்ளது. அதில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் ஆறு பேர்.

வீரர்கள் சர்வதேச அரங்கில் உருப்பெற்று வெல்வதற்கு அரசும், பெரும் தொழிலதிபர்களும் பொருளாதார ரீதியாக துணை நிற்க வேண்டும்.
ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக ஒலிம்பிக்கில் வீரர்கள் பதக்கம் வெற்றவுடன் பெற்றவுடன்தான் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு அரசும், தொழிலதிபர்களும் கோடிகளைக் கொட்டித் தருகின்றனர்.


அத்துடன், படிக்கும் பிள்ளை தான் சிறந்தது, விளையாட்டில் ஆர்வம் காட்டும் பிள்ளைக்கு படிப்பு வராது என்ற எண்ணமும் நமது பொதுப்புத்தியில் அழிக்கமுடியாமல் பதிந்துள்ளது. மேலும், விளையாட்டில் ஆர்வம் காட்டும் குழந்தைகளை பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி, ஊக்குவிப்பது கிடையாது.


ஒரு மாணவர், தனக்குப் பிடித்த விளையாட்டை விளையாட, கற்றுக்கொள்ள முறையான அடிப்படை வசதிகளோ, பிரத்யேக விளையாட்டுப் பள்ளிக்கூடங்களோ இந்தியாவில் கிடையாது.

ஒட்டுமொத்த ஒலிம்பிக் தனிநபர் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரேஒருவர் மட்டும்தான் பதக்கம் வென்றுள்ளார். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்நாட்டில் குடியேறிய துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங்க் தான் அவர்.

எனவே, இந்த ஒலிம்பிக்கில் இந்தியா செயல்பாடு சிறப்பாக உள்ளது என ஆறுதலுக்கு கூறிக்கொண்டாலும், சர்வதேச அளவில் ஒப்பிட்டால் இந்தியா பயணிக்க வேண்டிய தூரம் மிக நீ....ளமானது.

அதை சாத்தியப்படுத்தவற்கான பெரும் பங்கு அரசின் கைகளில்தான் உள்ளது. சீனாவை, போர்க்களத்தில் மட்டுமல்ல, விளையாட்டுக் களத்திலும் எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டியது அவசியமான ஒன்று.

"பள்ளி விளையாட்டு வகுப்புகளில் பசங்கள விளையாட விடாமா, கணக்கு படிக்க சொல்லிட்டு இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க மாட்டேங்குதுனு புலம்புனா எப்படிடா கிடைக்கும்" என விளையாட்டாக இப்போது மீம்ஸ்கள் வலம் வருகின்றன. சில நேரங்களில் ஜாலியான மீம்ஸ்களில்தான் யதார்த்த உண்மைகளும் புதைந்துள்ளன.


இதையும் படிங்க:இந்தியாவின் 'மக்கள் தலைவன்' (லோக் நாயக்) ஜே.பி.யின் கதை

Last Updated : Aug 8, 2021, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details