டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் ஆடவர் வட்டு எறிதல் போட்டியின் எஃப்-46 பிரிவில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பதக்கத்கிற்கான போட்டியில் இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார், ஏ.எஸ். அஜித் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
தேவேந்திர ஜஜாரியா, கொடுக்கப்பட ஆறு வாய்ப்புகளில் அதிகபட்சமாக 64.35 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடத்தையும், சுந்தர் சிங் 64.01 மீ தூரம் எறிந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். அஜித் சிங் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம், தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கங்களைப் பெற்றுத்தந்துள்ளனர்.
முன்னதாக, பாரா ஒலிம்பிக்கில் நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியா சார்பில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதல் (எஃப்-52 பிரிவு) வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.
மேலும், இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவினி லெகாரா தங்கம் வென்று அசத்தினார். அடுத்து, யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், இந்த இரண்டு பதக்கங்கள் உள்பட இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோவில் முதல் தங்கம்; அவனி லெகாரா வரலாற்றுச் சாதனை