சென்னை: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாரா டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளி வென்று, இந்தத் தொடரின் முதல் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.
இதையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பவினாபென் படேலுக்கு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராட்டுதவதில் பெருமைகொள்கிறேன்
தனது ட்விட்டர் பதிவில், "டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில், அற்புதமாக விளையாடி இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த இந்தியாவின் புதல்வி பவினாபென் படேலுக்கு எனது பாராட்டைத் தெரிவிப்பதன் மூலம் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சாம்பியனிடம் தோல்வி
இன்று (ஆக.29) நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், உலக சாம்பியனான சீன வீராங்கனை யிங் ஜோ (Ying Zhou) உடன் மோதினார். 19 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், யிங்கிடம் 0-3 என்ற செட் கணக்கில் பவினாபென் படேல் தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், 32 வயதான யிங் ஜோ ஆறாவது முறையாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2008, 2012 ஒலிம்பிக் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார். யிங் ஜா ஆறு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
டோக்கியோவில் பவினாவின் பாதை
டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில், தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் மட்டுமே பவின்பென் தோல்வியைத் தழுவியிருந்தார். அதன் பின்னர், நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி, ரவுண்ட் ஆஃப் 16 போட்டி, காலிறுதி, அரையிறுதி என அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார், பவினாபென்.
ஒலிம்பிக் வரலாற்றில், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியா பெறும் முதல் பதக்கம், பவினாபென் வென்றுள்ள வெள்ளிப் பதக்கம்தான். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பவினாபென், தனது 12ஆவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: PARALYMPICS: நீளம் தாண்டுதலில் வெள்ளி; நீஷாத் குமார் அசத்தல்