டோக்கியோ:மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவில் காலிறுதிப் போட்டிகள் இன்று (ஆக. 27) நடைபெற்றன. இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், செர்பிய வீராங்கனை போரிஸ்லாவா ரான்கோவிக் பெரிக் உடன் மோதினார்.
18 நிமிடங்களில் க்ளோஸ்
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திவந்த பவினாபென் படேல், இந்த ஆட்டத்தை 18 நிமிடங்களில் நிறைவு செய்தார். பவினாபென் படேல் 11-5, 11-6, 11-7 என மூன்று செட்களையும் வென்று செர்பிய வீராங்கனையை வீழ்த்தினார்.
இதன்மூலம், அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள பவினாபென், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதிசெய்துள்ளார். மேலும், இதுவே பாரா ஒலிம்பிக்கில் இந்தியா, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வாங்கப்போகும் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.