டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைஃபிள் 3பி எஸ்.ஹெச்-1 பிரிவின் இறுதிப்போட்டி இன்று (செப். 3) நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியாவின் அவனி லெகாரா பங்கேற்றார்.
மூன்றாம் இடம்
இப்போட்டி மூன்று விதமான நிலைகளில் நடைபெறும். முட்டியிடும் நிலை, முழுமையாக படுத்திருக்கும் நிலை, நிற்கும் நிலை என ஆகிய நிலைகளில் விளையாடப்படும்.
இதில் அவனி மூன்று நிலைகளிலும் முறையே 388, 393, 395 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் ஆட்டத்தின் முடிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்த லெகாரா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அடுத்தடுத்து சாதனை
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் லெகாரா தங்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றார்.
மேலும், இந்த வெண்கலப் பதக்கம் மூலம் பாரா ஒலிம்பிக் தனிநபர் பிரிவில், ஒரு தொடரில் இரண்டு பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் அவனி லெகாரா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா, 2 தங்கங்கள், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் 36ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: PARALYMPICS: இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி