ஐரோப்பிய கண்டங்களில் கரோனா வைரசின் தாக்கம் குறைந்துள்ளதால், பல்வேறு நாடுகளில் கால்பந்து போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றுவருகின்றன. இந்தச் சூழலில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அட்ரியா டூர் என்கிற டென்னிஸ் தொடரை செர்பியாவிலும் குரோஷியாவிலும் நடத்தினார். இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல வீரர்களும் பங்கேற்றனர்.
இப்போட்டியினைக் கண்டுகளிக்க ஏராளமான ரசிகர்களும் மைதானத்தில் குவிந்தனர். தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காமல் இந்தத் தொடரை நடத்தியதால் ஜோகோவிக் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, இந்தத் தொடரில் பங்கேற்ற மூன்று வீரர்களான டிமிட்ரோவ், போர்னா கோரிக், விக்டோர் ட்ராய்க்கி ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் இத்தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், குரோஷியாவிலிருந்து செர்பியாவின் பெல்கிரேட் வந்தடைந்தபோது ஜோகோவிக்குக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.