கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரிய தொடராகக் கருதப்படுவது விம்பிள்டன் தொடராகும். கடந்த 1877இல் இருந்து லண்டனில் பாரம்பரியமாக இந்தத் தொடர் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜூலை வரை நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட டெனிஸ் போட்டிகளில் இது உலகக்கோப்பை தொடராகத்தான் பார்க்கப்படுகிறது.
அந்தவகையில், இதன் 134ஆவது தொடர் வரும் ஜூன் 29 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இதனிடையே உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விம்பிள்டன் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெறாது என தொடரின் அமைப்பாளர்கள் கூறியிருந்தனர்.
அதேசமயம், இங்கிலாந்தில் கோவிட்-19 தொற்று வேகமாகப் பரவிவருவதால் இந்தத் தொடர் ரத்து செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்தத் தொடர் நடைபெறுவது குறித்து ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.