இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக இருப்பவர் சானியா மிர்சா. இவர் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு இஷான் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைப் பிறப்பு காரணமாக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமலிருந்த சானியா மிர்சா, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஹாபர்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை நதியாவுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் முற்றிலும் முடங்கி, விளையாட்டு வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் சானியா மிர்சா இன்று தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘அனைத்துத் தாய்மார்களுக்கும்’ என்ற உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில், “கர்ப்பம் என்பது எனது வாழ்க்கையில் முதல் முறையாக நான் அனுபவித்த ஒன்று. அதைப் பற்றி நான் அதிகம் யோசித்ததுண்டு. மேலும் நம் அனைவருக்கும் இதைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட படம் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் அதனை அனுபவிக்கும்போதுதான், உங்களுக்கு உண்மையில் அதற்கான பொருள் புரிகிறது. ஏனெனில் அது உங்களை ஒரு மனிதனாக முற்றிலும் மாற்றுகிறது.