2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லான் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் மூன்றாவது சுற்றில் சீனாவின் வாங் கியாங்கை அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார்.
முன்னதாக இந்த இரு வீராங்கனைகள் 2019ஆம் ஆண்டின் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மோதியபோது, செரீனா வில்லியம்ஸ் 6-1,6-2 என்ற செட்களில் 44 நிமிடத்தில் ஆட்டத்தை முடித்ததால், இன்றைய போட்டியிலும் அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இன்று தொடங்கிய முதல் செட் ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய வாங், 6-4 என்ற கணக்கில் கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செட்டில் 5-3 என்று வாங் முன்னிலை பெற, நிதானமாக ஆடிய செரீனா 6-6 என்று முன்னேறினார். இதையடுத்து ஆட்டம் டை ப்ரேக்கருக்கு சென்றது. அதில் சிறப்பாக ஆடிய செரீனா 7-2 எனக் வென்று இரண்டாவது செட்டை 6-7 எனக் கைப்பற்றினார்.