கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகையான விளையாட்டுத் தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருந்து வந்தது. தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், முதற்கட்டமாக விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் பிரபல டென்னிஸ் தொடரான யூ.எஸ்.ஓபன் 2020 இன்று முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நட்சத்திர டென்னிஸ் வீரர்களான ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் ஆகிய இருவரும் இந்த ஆண்டு யூ.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்.
இது, உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோக்கோவிச், யூ.எஸ்.ஓபன் பட்டத்தை வெல்வதற்காக சாதகங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தொடரில் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினால், அவர் வெல்லும் 18ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அது அமையும். தற்சமயம், ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்திலும், ரஃபேல் நடால் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.