அமெரிக்காவின் முன்னாள் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட். இவர் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கூடைப்பந்தாட்ட ஜாம்பவான், லேக்கர்ஸ் அணிக்காக ஐந்து முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துவர். ஷுட்டிங் பொசிஷனில் கோப் நின்றால், நிச்சயம் வெற்றியை அவர் அணியின் பெயரில் எழுதி வைத்துவிடலாம்.
இந்த நிலையில் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர் அமெரிக்காவில் நடந்தது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அசரென்காவை வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வென்று சாதனை படைத்துள்ளார்.
கோப் பிரையன்ட் ஜெர்சியோடு ஒசாகா அதன் பின்னர் கோப் பிரையன்ட்டின் லேக்கர்ஸ் அணி ஜெர்சியை அணிந்து கோப்பையைப் பெற்ற ஒசாகா, செய்தியாளர்கள் சந்திப்பிலும் அப்படியே கலந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில், ''என்னைப் பொறுத்தவரையில் நான் செய்யும் சில விஷயங்களின் மூலம் கோப் பிரையன்ட்டை பெருமைப்படுத்த முடியும் என நினைக்கிறேன். இது அவரது விளையாட்டு உணர்வை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை எப்படி அவரால் ஊக்கப்படுத்த முடிந்தது என்பது வியப்பாக உள்ளது. அவரைப் பற்றி ஒவ்வொருவரிடமும் ஒரு சிறந்த கதை உள்ளது.
அந்த விபத்தை நான் எதிர்பார்க்கவில்லை. நினைத்து பார்த்தால் சோகமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, நான் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என அவர் நினைத்தாரோ, அதைப் போலவே இருக்க விரும்புகிறேன். நான் ஜாம்பவான் வீராங்கனையாக வர வேண்டும் என நினைத்தார். நிச்சயம் வருவேன் என நினைக்கிறேன். இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பார்க்கலாம்...'' என்றார்.
கோப் பிரையன்ட்டின் ஜெர்சியோடு நவோமி ஒசாகா கோப்பையை வாங்கியதோடு, செய்தியாளர்களையும் சந்தித்த இந்நிகழ்வு, விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட ஜாம்பவான் - இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்!