இந்தியாவில் தற்போது நட்சத்திர விளையாட்டு வீராங்கனைகளாக ஜொலிக்கும் பி.வி. சிந்து, மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா, மேரி கோம் உள்ளிட்ட சிலருக்கு தனிரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால், இதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்தவர் சானியா மிர்சா. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் 2003ஆம் ஆண்டில் டென்னிஸ் போட்டியில் விளையாடத் தொடங்கியதன் மூலம் இந்தியர்கள் மகளிர் டென்னிஸ் போட்டிகளைையும் பார்க்க ஆரம்பித்தனர். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
17 ஆண்டுகளாக டென்னிஸ் போட்டியில் விளையாடிவரும் இவர், இதுவரை மகளிர் இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என மொத்தம் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் இல்லாமல் மற்ற தொடர்களையும் அவர் அதிகமாக வென்றுள்ளார். தற்போது இவரது டென்னிஸ் பயணத்தில் மறக்க முடியாத ஐந்து வெற்றிகள் குறித்த பிளாஷ்பேக் பார்ப்போம்.
சொந்த மண்ணில் முதல் டபுள்யூடிஏ ஓபன்:
ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது 2005 டபுள்யூடிஓ தொடரில்தான். அதுவரை ஆறுமுறை ஐடிஎஃப் ஓபன் பட்டத்தை வென்ற அவர், 2005இல் இறுதி போட்டியில் உக்ரைன் வீராங்கனை அலோனா பொன்டாரேன்கோவை 6-4, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தனது முதல் டபுள்யூடிஏ (WTA) பட்டத்தை வென்று அசத்தினார்.
இதன்மூலம், டபுள்யூடிஏ ஓபன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். தனது சொந்த மண்ணில் (ஹைதராபாத்) இந்த சாதனை படைத்ததால் அவருக்கு இந்த பட்டம் எப்போதும் ஸ்பெஷல்தான்.
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் (ஆஸ்திரேலியன் ஓபன்):
2008 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த சானியா மிர்சா, அடுத்த ஆண்டு நடைபெற்ற தொடரில் மகேஷ் பூபதியுடன் மீண்டும் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்று கம்பேக் தந்தார். இறுதிச் சுற்றில் பிரான்ஸின் நெதைல் டென்சி, இஸ்ரேலின் அன்டி ராமை 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
களிமண் களத்திலும் கால்பதித்த சானியா மிர்சா (பிரெஞ்சு ஓபன்):
2009இல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதை போலவே, 2012ஆம் ஆண்டிலும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மகேஷ் பூபதியுடன் சேர்ந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றில் 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் போலாந்தின் குளாவ்டியா ஜேன்ஸ், மெக்சிகோவின் சன்டியோகோ கொன்சோலஸை வீழ்த்தி தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார் சானியா மிர்சா
விம்பிள்டனிலும் அசத்திய சானியா மிர்சா:
2003ஆம் ஆண்டிலிருந்து 12 ஆண்டுகள் டென்னிஸ் விளையாடி வந்த சானியா மிர்சாவுக்கு மகளிர் இரட்டையர் பிரிவில் 2015ஆம் ஆண்டு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. அதற்கு சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸும் முக்கிய காரணம். குறிப்பாக, கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் உயரிய தொடரான விம்பிள்டனில் மார்டினா ஹிங்கிஸூடன் சேர்ந்து சானியா வெளிப்படுத்திய ஆட்டத்திறன் எல்லாம் மெய்சிலிர்க்கும் வகையிலேயே இருந்தது. இறுதி போட்டியில் ரஷ்யாவின் மகரோவா - வெஸ்னினாவை 5-7, 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மகளிர் இரட்டையர் பிரிவில் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்று அசத்தினார். இதன்மூலம், விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
தாய்மைக்கு கிடைத்த முதல் வெற்றி: (ஹோபார்ட் ஓபன்)
பொதுவாக, திருமணமாகி குழந்தைபெற்றெடுக்கும் வீராங்கனைகளுக்கு மீண்டும் கம்பேக் தருவது சற்று கடினமாகதான் இருக்கும். ஆனால், சானியா மிர்சா அந்த நிலையை எளிதாக கடந்தார். 2017இல் இறுதியாக பங்கேற்ற சானியா மிர்சா குழந்தை பெற்றெடுத்த பின் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஹோபார்ட் சர்வேதச தொடரில் நடியா கிச்னோக்குடன் சேர்ந்து மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம், அவரது தாய்மைக்கு கிடைத்த முதல் வெற்றியாகதான் இது பார்க்க்பபடுகிறது. 33 வயதான சானியா மிர்சா எதிர்காலங்களில் தனது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இன்னும் பல பட்டங்களை வெல்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனா: ஒரே வாரத்தில் ரூ. 1.25 கோடி நிதி திரட்டிய சானியா மிர்சா!