இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆடவருக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ’ஜோர்ன் போர்க்’ குரூப்பில் இடம்பெற்றுள்ள இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் - ஐந்தாம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோம்னிக் தீம் ஆகியோர் மோதினர்.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டை-ப்ரேக்கர்வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் தீம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஜோகோவிச் அந்த செட்டை 3-6 என இழந்தார்.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இரண்டு வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இம்முறையும் ஆட்டம் டை-ப்ரேக்கர் வரை சென்றது. அதில் உறுதியுடன் போராடிய இளம் வீரர் தீமிடம் மீண்டும் 6-7 என ஜோகோவிச் செட்டை இழந்தார்.
இதனால் டோம்னிக் தீம் 6-7, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சியளித்தார். இந்த வெற்றியின் மூலம் ஏடிபி ஃபைனல்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு டோம்னிக் தீம் தகுதி பெற்றுள்ளார்.
இந்தத் தொடரில் நாளை நடைபெறும் குரூப் போட்டியில் டோம்னிக் தீம், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியையும் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் ஜோகோவிச் சுவிஸ் நட்சத்திரம் ஃபெடரரையும் எதிர்கொள்கின்றனர்.