டென்னிஸில் ஆஸ்திரேலிய ஓபன், பிரேஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் இருந்தாலும் விம்பிள்டன் தொடர்தான் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. டென்னிஸின் உலகக்கோப்பை என்று விம்பிள்டனைக் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு பாரம்பரியான இந்தத் தொடர், புற்கள் ஆடுகளத்தில் (Grass Court) நடைபெறுகிறது. கிராஸ் கோர்ட் என்றாலே ஃபெடரர்தான். அவரை அடிச்சிக்க ஆளே இல்லை என்றாலும், அவரது காலம் முடிந்துவிட்டது, இது நோவாக் ஜோகோவிச்சின் காலம் என்கிறார்கள் தற்போதைய டென்னிஸ் ரசிகர்கள்.
ஆம், இது ஜோகோவிச்சின் காலமாகத்தான் இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரை வென்ற ஜோகோவிச் புற்களை ருசிக்கத் தொடங்கிவிட்டார். ஏனெனில் அவர்தான் தற்போதைய 'GOAT’ ஆயிற்றே(Greatest Of All Time). ஆங்கிலத்தில் கோட் என்றால் தமிழில் ஆடு என்ற ஒரு பொருளும் இருக்கிறது. அந்த வகையில் ஜோகோவிச் தற்போது டென்னிஸின் ஆடு.
அதனால்தான் என்னவோ ஜோகோவிச் புற்களை மேய்ந்துவருகிறார். இதனால், விம்பிள்டன் ஆடுகளங்களிலும் ஆங்காங்கே புற்கள் குறையத் தொடங்கிவிட்டது. உலகக்கோப்பை இறுதிப் போட்டி மத்தியில் இவர்களது ஃபைனலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றதில், ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என்ற செட் கணக்கில் வென்றார்.
நான்கு மணிநேரம் 57 நிமிட போராட்டத்திக்கு பிறகு, தோல்வி குறித்து ஃபெடரர் கூறிய வார்த்தைகள் இவை: "சாம்பியன்ஷிப் பாயிண்ட்டை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இருப்பினும், என்னால் முடிந்த அளவிற்கு எனது ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டேன்".
37 வயதில் அளவிற்கு மீறிய ஆட்டத்தைதான் ஃபெடரர் அன்று வெளிப்படுத்தினார், இனியும் வெளிப்படுத்துவார். டென்னிஸில், ஜோகோவிச்சிற்கு பிறகு அல்லது அவரை போன்ற பல GOATS வரலாம், ஆனால் ஃபெடரர் போன்று ஒரு வீரர் கிடைப்பது எல்லாம் டென்னிஸில் அடுத்தடுத்து ஏஸ் புள்ளிகளை பெறுவதுபோல் அரிதிலும் அரிது.
சுவிட்சர்லாந்து என்றாலே, இந்தியர்களின் கறுப்புப் பணம் இருக்கும் சுவிஸ் வங்கி என்று நினைவுக்கு வரும். ஆனால், அவர்களுக்குள் தனது பெயரை செலுத்தியவர் ஃபெடரர். பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களுக்கு டென்னிஸ் தெரியவில்லை என்றாலும் அவர் குறித்து தெரியாமல் இருந்திருக்காது.
கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சின் கடவுளோ அதுபோல டென்னிஸுக்கு ஃபெடரர். இருவரது ஆட்டமும் ஹை கிளாஸாக இருக்கும். எப்போது பார்த்தாலும் இவர்களது ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கும். சச்சின் ஃபெடரரின் ரசிகர், ஃபெடரரும் சச்சின் ரசிகர். இதனால், விம்பிள்டன் தொடரில் டென்னிஸ் கடவுளின் ஆட்டத்தை காண கிரிக்கெட்டின் கடவுள் வருவார்.
தற்போது ஜோகோவின் காலமாக இருந்தாலும், அந்த ஜோகோவையே அசர வைக்கும் வகையில் புதுமையான ஷாட் ஆடியவர் ஃபெடரர். 2009 அமெரிக்க ஓபன் தொடரில் ஃபெடரர் தனது இரண்டு கால்களுக்கு நடுவில் ஆடிய ஷாட்டைக் கண்டு ஜோகோவிச் மட்டுமில்லை உலகமே மிரண்டது.
ஜூனியர் விம்பிள்டன் வென்ற ஃபெடரர்
வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் தெரியும் டென்னிஸில் ஃபெடரர் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தினார் என்று. ஃபெடரர் எத்தனை தொடர்களில் விளையாடினாலும், விம்பிள்டனில் ஃபெடரர் விளையாடும் ஆட்டமே தனி. பொதுவாக, முதல் என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான். ஃபெடரர் ஜூனியர் அளவில் தனது முதல் பட்டத்தை விம்பிள்டனில்தான் கைப்பற்றினார். பின்னர் சீனியர் வீரராக 2001 விம்பிள்டனில்தான் அவருக்கு சிறந்த ஓபனிங் கிடைத்தது.
2001 விம்பிள்டனின் நான்காவது சுற்றில் அமெரிக்க ஜாம்பவான் பீடே சாம்ப்ராஸை எதிர்கொண்டார் ஃபெடரர். சர்வீஸ் செய்வதில் வல்லமை பெற்ற சாம்ப்ராஸிற்கு ’பிஸ்டல் பீடே’ என்ற செல்லப்பெயர் உண்டு. அப்பேற்பட்ட ஜாம்பவானை ஃபெடரர் வீழ்த்தினார்.
பீடே சாம்ப்ராஸ் - ரோஜர் ஃபெடரர்
ஜுனியர் பிரிவில் வென்றதை போல சீனியர் பிரிவிலும் ஃபெடரர் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை விம்பிள்டனில்தான் (2003) ருசித்தார். இதனால்தான் என்னவோ ஃபெடரருக்கு விம்பிள்டன் மீதும், விம்பிள்டனிற்கு ஃபெடரர் மீதும் காதல். அதன்பின்னர் ஆதிக்கம் செலுத்திய ஃபெடரருக்கு 2007இல் சிறந்த போட்டியாளராக அமைந்தார் நடால்.
சமகாலத்தில் கடும் போட்டியாளர்களை சந்திக்காத விளையாட்டு இருக்காது. கால்பந்தில் எப்படி பீலே - மரோடோனா, மெஸ்ஸி- ரொனால்டோவோ அதேபோல, டென்னிஸுக்கு ஃபெடரர் - நடால். இவ்விரு வீரர்கள் பலமுறை கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மோதினாலும் 2008 விம்பிள்டன்தான் ஆகச்சிறந்த டென்னிஸ் போட்டி.
2003 முதல் 2007வரை வரிசையாக ஐந்துமுறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவருக்கு 2008இல் வெற்றிபெற்றால் ஸ்வீடனின் ஜாம்பவான் வீரர் ஜான் போர்கின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிட்டியது. தனது சாதனையை ஃபெடரர் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ஜான் போர்க்கும் மைதானத்தில் அமர்ந்திருந்தார். ஃபெடரர் - நடால் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த, ஒட்டுமொத்த ரசிகர்களின் தலைகளும் இருவரை மட்டுமே நோக்கியது.
நடால் ஆக்ரோஷமான வீரர், பந்தை வேகாக அடித்து எதிரே விளையாடுபவரை இங்கும் அங்கும் ஓட வைத்து திணறடிப்பார். ஆக்ரோஷம்தான் அவரது ப்ளஸ். அதை வைத்தே புள்ளிகளை பெறுவார். ஆனால், ஃபெடரர் அதற்கு நேர்மறையான வீரர். அவருக்கு சர்வீஸும், பேக்ஹண்ட், ஃபோர்ஹேண்டும்தான் ப்ளஸ். எதிரணி வீரர்கள் தன்னை ஓட வைத்தாலும் அவர்களை ஓட வைக்காமலேயே தனது ஆட்டத்தின் மூலம் திசை திருப்பி குழப்பமடைய செய்வார். குறிப்பாக, டிராப் ஷாட் அடிப்பதில் அவரது ராக்கெட் சொல்வதை பந்து கேட்கும்.
இப்படி இரு வீரர்களும் போட்டிபோட முதலிரண்டு செட் பாயிண்ட்டை ஃபெடரர் இழந்தார். களிமண் நாயகன் நடாலின் ஆட்டத்திற்கு ஃபெடரரால் ஈடுகொடுக்க முடியவில்லை. ரசிகர்களும் வெல்லப்போவது களிமண்ணா அல்லது கிராஸ் கோர்ட்டா என்ற ஆர்வத்தில் இருந்தனர்.
மூன்றாவது செட்டில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்த்தபோது, மழை குறிக்கிட்டது. இதனால், ஏற்பட்ட இடைவேளை ஃபெடரருக்கு சாதகமாத அமைந்தது. பின்னர் தொடங்கிய மூன்றாவது செட்டையும், நான்காவது செட்டையும் ஃபெடரர் டை பிரேக்கர் முறையில் வென்று கம்பேக் தந்தார்.
இதைத்தொடர்ந்து, ஐந்தாவது மற்றும் கடைசி செட் ரசிகர்களை நுனி சீட்டில் உட்கார வைத்தது. அந்த செட்டின் இறுதியில் ஃபெடரர் (Fed error) செய்த சிறு தவறால், பந்து வலை மீது பட்டது. இதனால், நடால் 6-4, 6-4, 7-6 (7-5), 7-6 (10-8), 7-9 என்ற செட் கணக்கில் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றதால் ஃபெடரரைவிட நடால்தான் சிறந்த வீரர் என்று ரசிகர்கள் எண்ணினர்.
தனது சாதனையை ஃபெடரர் முறியடிக்கவில்லையே என்ற வருத்தம் ஜான் போர்க்கின் முகத்தில் இருந்தது. நான்கு மணி நேர போராட்டத்துக்கு பின்பும், தன்னால் வெற்றிபெற முடியவில்லையே என்று ஃபெடரர் மைதானத்தில் கண்ணீர் வடித்தார். வரலாற்றின் சிறப்புமிக்க போட்டிகளின் முடிவுகள் என்றும் சோகத்தில்தான் முடியும் என்பதற்கு இந்த போட்டி சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் நடைபெற்ற போட்டியும் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இம்முறை நடலாக்கு பதிலாக ஜோகோவிச்சை சந்தித்தார் ஃபெடரர். பொதுவாக, ஃபெடரரை விம்பிள்டனில் வீழ்த்த வேண்டும் என்றால் அவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக போராட வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே வெற்றி என்பது சாத்தியம்.
அதேபோல், முதல் செட்டையும், மூன்றாவது செட்டையும் டை பிரேக்கர் முறையில் வென்றார் ஜோகோவிச். ஆனால், ஃபெடரரோ இரண்டாவது, நான்காவது செட்டையும் மிக எளிதாக வென்றார். 37 வயதிலும் தான் கிராஸ் கோர்ட் கிங் என்பதை நிரூபித்தார் அவர். குறிப்பாக, நான்காவது செட்டில் ஜோகோவிச் அடித்த பந்தை ஃபெடரர் அடிக்காமல் ரிவ்யூ எடுத்தார். கோட்டுக்கு ஒரு இன்ச் விலகி பந்து பிட்ச் ஆனது ரிவ்யூவில் தெரியவந்தது.
இதெல்லாம், எப்படிதான் அவருக்கு தெரிந்தது என்று ரசிகர்கள் வியப்படைந்தனர். ஆனால், ஃபெடரர் போன்ற GOATடிற்கு இதெல்லாம் சாதாரணம். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற கடைசி செட் சுமார் 100 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது. இரண்டு செட்டின் வெற்றியாளரை யார் என்பதை தீர்மானிக்க டை பிரேக்கர் நடைபெற்றதால், கடைசி செட்டில் டை பிரேக்கருக்கு வாய்ப்பில்லை. இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற விதிக்கு இரு வீரர்களும் தள்ளப்பட்டனர்.
ஆனால், இருவரும் 12-12 என்ற புள்ளிகள் எடுத்ததால், இவர்களது விதி போட்டியின் விதிமுறையை மாற்றச் செய்தது. கிரிக்கெட் போன்று யார் அதிகம் பவுண்ட்ரி அடித்தார்கள் என்று பாராமல், ஆட்டம் மீண்டும் மூன்றாவது டை பிரேக்கருக்கு சென்றது. 2008ல் எப்படி இறுதித் தருணத்தில் தவறு செய்தாரோ அதேபோல் இம்முறையும் தவறான ஷாட் ஆடினார் ஃபெடரர். இதன் விளைவாக, 6-7, 6-1, 6-7, 6-4, 12-13 என்ற செட் கணக்கில் ஜோகோவிடம் தோல்வி அடைந்தார். இதனால், ஃபெடரரைவிட ஜோகோதான் இங்கு (டென்னிஸில்) GOAT என்றனர் சில நிபுணர்கள்.
ஆனால், வயதான பின்புதான் ஃபெடரரின் கேம் அடுத்த லெவலுக்கு சென்றது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2017 ஆஸ்திரேலிய ஓபன் ஃபைனல்தான். 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டி போலவே, நடால் - ஃபெடரர் (ஃபெடால்) இருவரும் மோதிய 2017 ஆஸ்திரேலிய ஓபன் தொடர் அமைந்தது. இம்முறை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரர் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடினார்.
அதேபோல், 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு பிறகு விம்பிள்டனில் இவ்விரு வீரர்களும் 2019 அரையிறுதிச் சுற்றில்தான் மோதினர். இதில், ஃபெடரர் வெற்றிபெற்று 2008 தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால், 2019 விம்பிள்டன் இறுதிப்போட்டி தோல்விக்கும் நிச்சயம் ஃபெடரர் எதிர்காலத்தில் முற்றுப்புள்ளி வைப்பார். விம்பிள்டனில் இனி ஜோகோ புற்களை மேய்ந்தாலும், கடைசி புள் இருக்கும்வரை ரோஜர் ஃபெடரர் விம்பிள்டனில் விளையாடிக்கொண்டுதான் இருப்பார் (G.O.A.T)
ஃபெடரருக்கு வயது ஆகிவிட்டது இனி அவரால் பழைய ஆட்டத்தை தொடர முடியாது என்ற விமர்சனம் எழுகிறது. ஆனால், ஃபெடரர் ஒயின் போன்றவர், நாட்கள் போகபோக அதன் சுவை கூடுவது போல் ஃபெடரரின் ஆட்டமும் ரசிகர்களுக்கு இனி சுவை கூட்டும். 20 வருடங்களில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் ஃபெடரருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
"ஃபெடரரை விட நான்தான் சிறந்த வீரர் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு டென்னிஸ் என்றால் என்னவென்றே தெரியாது" - ரஃபேல் நடால்